சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவல், புயல் தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்து  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தற்போது புயலும் உருவாகி உள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெற்று  நாளை மறுநாள் (25ந்தேதி) பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும், புயல் கரையை கடக்கும்போது 89 முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  நிவர் புயல் தடுப்பு பணிகள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து முதல்வர் பழனிசாமி மதியம் 12.15 மணிக்கு  அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார், தங்கமணி மற்றும்  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் நிருவாக ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

‘நிபர்’ புயலை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

முன்னதாக புயல் முன்னெச்செரிக்கை காரணமாக முதல்வரின் அரியலூர், பெரம்பலூர் சுற்றுப்பயண தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நவ.25 ஆம் தேதி சுற்று பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் நிவர் புயல் காரணமாக 27 ஆம் தேதிக்கு சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.