புதுடெல்லி: தகுதியற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால், இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
அவர் கூறியுள்ளதாவது, “திரு.பிரதமர் அவர்களே, நாட்டின் பொருளாதாரம் தடம் புரண்டுள்ளது. அந்த ரயில் செல்லும் பாதையினுடைய குகையின் முனையில் எந்த வெளிச்சமும் தென்படவில்லை.
உங்களுடைய தகுதியற்ற நிதியமைச்சர், அந்தக் குகையின் இறுதியில் தென்படும் வெளிச்சம் நீங்கள்தான் என்று உங்களைப் புகழ்கிறார். அப்படித்தான் என்றால், நான் சொல்வதை நம்புங்கள் பிரதமரே, மந்தநிலை என்ற ரயில் முழு சத்தத்துடன் வந்து கொண்டுள்ளது.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற நடவடிக்கைகள் மடத்தனத்திற்கும், உங்களுடைய அரசின் திறமைக் குறைவிற்கும் தெளிவான சாட்சிகள். மக்கள் மீதான இந்த அரசின் இரக்கமற்ற நடவடிக்கைகள், இந்த நாட்டின் பொருளாதாரத்தை பெரிய சிக்கலான மந்தநிலைக்குள் தள்ளிவிட்டுள்ளன” என்று டிவிட்டரில் எச்சரித்துள்ளார் ராகுல் காந்தி.