புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பொருளாதாரத்தினை தூண்டும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கப்பட உள்ளது. இந்த முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், நெருக்கடியான பொருளாதார சூழல் கருதி, இந்த தொகையானது வழங்கப்பட உள்ளது.
இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் வழங்கப்படும். அதோடு இந்த 10,000 ரூபாயானது ரூபே ப்ரீபெய்ட் கார்ஃப்டு மூலம் வழங்கப்படும். இந்த கார்டில் உள்ள தொகையை மார்ச் 31, 2021 வரை செலவு செய்து கொள்ள முடியும்.
இந்த கார்டின் மூலம் ஊழியர்கள் பெறும் 10,000 ரூபாய்க்கான தொகையில், மாதம் 1000 வீதம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும். இந்த திட்டத்திற்காக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.