திருவனந்தபுரம்:

வ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் கடந்த ஆண்டு கேரளாவை மிரட்டிய நிலையில், தற்போது மீண்டும் பரவி வருகிறது. கேரள இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் ‘நிபா’  எனும் அரிய வகை வைரஸ் நோய் மக்களை மிரட்டியது. இந்த நோய்க்கான வைரஸ்  வவ்வால்கள் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. இந்த நோய் தாக்குதல் காரணமாக கேரளாவில் 17  பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதும் தாமதமானது. அதையடுத்து  மாநில மற்றும் மத்தியஅரசு எடுத்த அதிரடி நடவடிக்கைககள் காரணமாக   நோய் அறவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள முதல்வருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில்  தற்போது மீண்டும் கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரியாக ஓராண்டுக்கு பிறகு  மீண்டும் எர்ணாகுளம் பகுதியில்  நிபா வைரஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக    86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா

எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரை சேர்ந்த, தொடுபுழாவில் படித்து வரும் கல்லூரி மாணவர் நிபா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாநில சுகாதாரத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டது.

அதேசமயம், நிபா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக ரத்த மாதிரி, புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் நபர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது, புனேவில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் இருந்த மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.