நியூஸ்பாண்ட்:
அட.. நியூஸ்பாண்ட் அலைபேசினார்.
“ஆச்சரியமாக இருக்கிறதே.. எங்களை எல்லாம் நினைவிருக்கிறதா?” என்றோம்.
சிரித்தவர், “மறந்தால்தானே நினைப்பதற்கு? அன்புச்செழியனை கண்டுபிடித்துவிட்டார்களா, காவல்துறையினர்?” என்றார்.
“கிண்டலா.. செய்திகளை முந்தித்தருவது நீர்தானே அய்யா… சொல்லும்..!”
“தனது மரணத்துக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் அசோக்குமார். அதே நேரம், அன்பு நல்லவர், உத்தமர் என்று சில திரைப்பலபங்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதோடு, அசோக்குமார் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம், அவர் எழுதியதுதானா என்கிற சந்தேகத்தைக் கிளப்புகிறது அன்பு தரப்பு!”
“ஆமாம்.. அதெல்லாம் தெரிந்த விசயம்தானே.. காவல்துறை என்ன நினைக்கிறதாம்ஃ0”
“ என்ன நினைப்பது… அவர்களது சோதனையில் அந்தக் கடிதம் அசோக்குமார் எழுதியதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதாம். இதையடுத்தே அன்புச்செழியனைப் பிடிக்க தீவிரமாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..”
“அந்த வட்டாரம் தெரிவிப்பது இருக்கட்டும்.. தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் அன்பு,
இருப்பதாக தகவல்கள் உலவுகின்றனவே..!”
“உண்மைதான் என்கிறார்கள். மதுரையில் சிறிய முதலீட்டில் ஃபைனான்ஸ் தொழிலில் இறங்கினார் அன்பு. அ.தி.மு.க.வில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். அந்த வகையில் சில அரசியல் தொடர்புகள் ஏற்பட்டன. அப்படியே மன்னார்குடி வகையறாவுக்கு நெருக்கமானார். குறிப்பாக, வளர்ப்பு மகனுக்கு அணுக்கத்தொண்டர் ஆனார். அந்த வளர்ப்பு மகனின் பணத்தை வைத்து திரைத்துறையில் ஃபைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார்.
மன்னார்குடி வகையறாவுக்கு சேவகம் செய்துவந்தவர்களில் முக்கியமானவரான தற்போதைய துணையான முக்கிய அமைச்சர் அன்புவுக்கு நெருக்கமானார்.
ஒரு கட்டத்தில் வளர்ப்பு மகன் கை வீழ ஆரம்பித்தது. முக்கிய துணையிடம் பணம் புரள ஆரம்பித்தது. அந்த பணத்தைக் கொண்டு திரைத்துறையில் ஃபைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார் அன்பு.
ஆகவே இவரை காவல்துறையினரிமிருந்து, காப்பாற்றி தனது “வளைக்குள்” பாதுகாப்பாக வைத்திருக்கிறார் முக்கிய துணை அமைச்சர் என்கிறார்கள்!”
“பிறகு எப்படி, காவல்துறை வலைவீசிப் பிடிக்கும்?”
“இன்னும் கேளும்… சமீபத்தில் கட்சி சின்னம், பெயர் குறித்துத் தீர்ப்பு வந்திருக்கிறது அல்லவா. அது அந்த முக்கிய துணை அமைச்சருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. தனது அணிக்குத்தான் கட்சி, சின்னம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்திருப்பதாக ட்விட்டினார் அவர். இது “பெரிய” அமைச்சருக்கு வயிற்றில் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சியில் தனது பிடி தளர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறார். ஆகவே “துணை”யை அடக்கி வைக்க அன்புவைப் பயன்படுத்த நினைக்கிறாராராம்!”
”அட…”
“ஆமாம்.. அன்புவை கைது செய்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுவது.. அதன் மூலம் அவரது தொடர்புகளை வெளிப்படுத்துவது.. இதனால் “துணை”க்கு பெரும் நெருக்கடி ஏற்படும். இதையடுத்து அவர் தனக்கு அடங்கி நடப்பார் என்று நினைக்கிறாராம் பெரிய அமைச்சர்!”
“பெரிய திட்டமாக அல்லவா இருக்கிறது..!”
“ஆமாம்..”
“சரி அது இருக்கட்டும்… எதுவானாலும் மத்திய மேலிடத்தைக் கேட்டுத்தானே நடப்பார்.. இவரது திட்டத்துக்கு மத்திய மேலிடம் ஒப்புக்கொண்டுவிட்டதா”
“ஒப்புதல் இல்லாமல் இவர் இயங்குவாரா? ஏற்கெனவே இந்தத் திட்டத்தை அங்கு சொல்லிவிட்டாராம். அவர்களும் ஓகே சொல்லிவிட்டாராம்!”
“அப்படியா..”
“ஆமாம்.. மன்னார்குடி குடும்பத்தை கிட்டதட்ட கார்னர் செய்தாகிவிட்டது. அடுத்து துணை வகையறாவையும் அன்பு விவகாரத்தைவைத்து ஒடுக்கிவிட்டால் நல்லது என்று நினைக்கிறதாம் மத்தய மேலிடம்!”
“அடுத்து, பெரிய மந்திருக்கும் ஆப்பு வைப்பார்களோ..!”
“இருக்லாம்.. அவர் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றனவே..!”
“இப்படி கட்சியின் மூன்று அணிகளையும் சிதைத்துவிடுவதுதான் மத்திய மேலிடத்தின் திட்டமோ!”
“அட.. இதை நான் சொல்லித்தான் உமக்குத் தெரியவேண்டுமா?”
– போனை வைத்துவிட்டார் நியூஸ்பாண்ட்.