சென்னை: 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில், ஜூன் 1ந்தேதி முதல் 18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறுவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் அதுபோன்ற விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருந்தாலும், எச்சரிக்கையை மீறி, 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் பல விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை புதிய விதியை ஜூன் 1ந்தேதி முதல் அமல்படுத்துகிறது. அதன்படி 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அவரின் பெற்றோருக்கு 3 மாத சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த விதி வரும் ஜூன் 1 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.