சென்னை
மரணமடைந்தோர் பெயரை ஆதார் பதிவேட்டில் இருந்து நீக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இந்தியாவில் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு தொடக்கம், சிம் கார்டு என அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாதது ஆகும். இதுவரை மொத்தம் 142 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 123 பேருக்கு ஆதார் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் ஆதாரில் இருந்து நீக்க புதிய வசதியை ஆதார் அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் சேவையில் உள்நுழைவு மூலம் லாகின் செய்தால் அதில் ”இறந்த குடும்பத்தினர் குறித்து தகவல் தெரிவிக்கவும்” என்ற புதிய பகுதி உள்ளது. அதில் சென்று எந்த மாநிலத்தில் அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இறந்தவருடைய ஆதார் எண், இறப்பு சான்றிதழில் உள்ள இறப்பு பதிவு எண், இறப்பு சான்றிதழில் உள்ள அவரது பெயர், பாலினம், இறப்பு தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு அவரது இறப்பு சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசியாக இறந்தவருக்கு விண்ணப்பம் செய்பவர் யார் என்ற தகவலை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பின் அவரது பெயர் ஆதாரில் இருந்து நீக்கப்படும்.
அதிகாரி ஒருவர் இது குறித்து,
“இறந்தவர் பெயரில் உள்ள ஆதாரை வைத்து நடைபெறும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாரிசு சான்றிதழ் போன்றவை வழங்கும்போது இந்த ஆதார் நீக்க சான்றிதழ் முக்கிய ஆவணமாக இருக்கும்.
மேலும் சொத்து பதிவின்போது இறந்தவரின் ஆதார் நீக்கம் மூலம் அது உறுதி செய்யப்படும்.
அதாவது தற்போது இறப்பு சான்றிதழ் மூலம் உறுதி செய்வதற்கு பதில் ஆதார் நீக்கம் மூலம் உறுதி செய்யப்படும். தற்போது இறப்பு பதிவுகளில் இருந்து ஆதார் நீக்கும் நடைமுறை இருந்தாலும், குடும்பத்தினர் மூலம் நீக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.. ”
என்று தெரிவித்துள்ளார்.