புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை(இஐஏ) எதிர்த்து பரப்புரை செய்த FridaysforFuture.in என்ற இணையதளம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நிலையில், அந்த இணையதளத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 18ன் கீழ், நடவடிக்கைக்கு உகந்த மற்றும் தண்டனைக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையின் பரிந்துரைப்படி, ஜூலை 10ம் தேதி அந்த இணையதளம் தடைசெய்யப்பட்டது. இந்த நிலையில்தான், இந்தப் புதிய பரிந்துரையும் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இஐஏ என்பது நாட்டின் சுற்றுச்சூழல் அம்சங்களுக்கு எதிரானதாயும், பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாயும் உள்ளதாக அந்த குறிப்பிட்ட இணையதளம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரைவை நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடலுக்கான நிறைவு தேதி ஜூன் 11ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அத்தேதி ஆகஸ்ட் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை மோசமடையச் செய்யும் வகையில் அமைந்த மத்திய அரசின் நடவடிக்கையை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கும் வகையில் அந்த இணையதளத்தின் பிரச்சாரம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.