மும்பை
பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தனது மாதாந்திர கட்டணத்தை குறைத்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படம், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் புதிய ஓடிடி தளங்களில் வருகையும் அதிகமானது. உலகம் முழுதும் உள்ள ஓடிடி தளங்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டு முதலிடத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. அடுத்ததாக 17 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் அமேசான் ப்ரைம் உள்ளது. மற்ற ஓடிடி தளங்களோடு ஒப்பிடுகையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதுண்டு.
நெட்ஃப்ளிக்ஸ் தளம் தனது கட்டணங்களை அதிரடியாகக் குறைத்துள்ளது. இதுவரை ரூ.200 ஆக இருந்து வந்த மொபைல் ப்ளான் கட்டணம் தற்போது ரூ. 149 என்று குறைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டும் மொபைல் அல்லது டேப்லட்டில் பயன்படுத்த இயலும். மாதம் ரூ.499 கட்டணம் வசூலிக்கப்பட்ட பேசிக் ப்ளான் தற்போது ரூ.199 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தவிர மாதம் ரூ.649 ஆக இருந்த ஸ்டாண்டர்ட் ப்ளான் ரூ.499 ஆகவும், ரூ.799 ஆக இருந்த ப்ரீமியம் ப்ளான் ரூ.649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.