டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு பதிலாக நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி படத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திர போசிஸ் உருவப் படத்தைக் ராஷ்டிரபதி மாளிகையில் கடந்த 23-ம் தேதி திறந்துவைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது நேதாஜி அல்ல என்றும் அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி தான் என்றும் டிவிட்டர்வாசிகள் விமரிசித்தும், கேலி செய்தும் வருகின்றனர்.
இதுபற்றி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ராமர் கோயிலுக்கு ரூ. 5 லட்சம் கொடையாக தந்த நேதாஜி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் ப்ரோசென்ஜித் படத்தை திறந்து வைத்து நேதாஜிக்கு மரியாதை செலுத்தியுள்ளார் குடியரசுத் தலைவர் என்றார். பின்னர் மொய்த்ரா அந்தப் பதிவைப் நீக்கி விட்டார்.
ஆனால், படத்தில் இருப்பது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் என்றும், அவரின் உறவினர்களிடமிருந்து வாங்கிய நிஜ புகைப்படத்தை கொண்டு ஓவியர் பரேஷ் மெய்டி வரைந்த படத்தையே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளதாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.