மதுரை: நியோ மேக்ஸ்  நிறுவன மோசடியால்  பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க நவம்பர் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்  ‘நியோமேக்ஸ்’ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் .  நிதி தொடர்பான பரிவர்த்தனைகள் செய்து வரும்  இதற்கு ஏராளமான கிளைகளும் உள்ளது. மேலும்,   42 துணை நிறுவனங்களும் உள்ளது.  இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், கபில், வீரசக்தி என பலர் உள்ளனர்.

இந்த நிறுவனம் வசீகர விளம்பரங்கள் மற்றும் அதிக வட்டி என  மக்களிடம் ஆசை காட்டி பணத்தை பெற்று, தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால்,  அதிக வட்டி  தருவதாகவும், நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்களது  நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில்  இதை நம்பி ஏராளமானோர் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை செய்தனர்.

ஆனால், கோடி கணக்கில் பணம்சேர்ந்ததும், பணம் செலுத்தியவர்களுக்கு வட்டி உள்பட எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால், கொந்தளித்த மக்கள், நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக குரல் எழுப்பியதுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுரையை சேர்ந்த கபில், கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரை கைது செய்த நிலையில், மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 34 நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பல்லாயிரக்கணக்கான டாக்குமென்ட்கள், ஹார்ட் டிஸ்க்கள், உயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் பத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் முக்கிய இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்ட சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து மற்றும் சகாய ராஜா போன்றோர் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்/முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் மீது 100 புதிய புகார்கள் சிறப்பு முகாம் மூலம் பெறப்பட்டுள்ளது. அதன்மூலம் இதுவரை மொத்தம் 22 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும்,   நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களின் 160 வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன என பொருளாதார குற்றப்பிரிவு தகவல் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.அஇந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது பெயர், முகவரி செல்போன் எண், ஆதார் எண், பாண்டுகளின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை , முதலீடு செய்த வங்கி கணக்கு ஏஜென்ட்களின் விவரம் உள்ளிட்டவைகளை அடங்கிய விவரங்களுடன் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகர் தபால்தந்திநகர் பார்க்டவுண், சங்கரபாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவம்பர் 15-ம் தேதி வரை நேரில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய ஆருத்ரா, ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடிகளின் வரிசையில் தற்போது நியோ மேக்ஸ் நிதி நிறுவனமும் இணைந்துள்ளது. நியோ மேக்ஸ் என்ற மோசடி நிறுவனமும் அதன் 63 துணை நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.