சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முயற்சி செய்தாக தகவல்கள் பரவி வருகின்றன. சித்து சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்துள்ள நிலையில், பஞ்சாபில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2022ம்ஆண்டு பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. மாநில முதல்வரான கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும், எம்எல்ஏ சித்துவும் இடையே பல ஆண்டு காலமாக சமூகமான நிலை இல்லாத நிலை தொடர்கிறது. தேர்தலை முன்னோக்கி இருவரும் அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பூதாகாரமான நிலையில், இருவருக்கும் இடையே மேலும் விரிசல் ஏற்பட்டுஉள்ளது.
பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அல்லது அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை குறித்து வைத்து சித்து காய்களை நகர்த்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாக, இருவருமே அரசியல் சாணக்கியன் பிரசாந்த் கிஷோரை அடுத்தடுத்து சந்தித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் அம்ரீந்தர்சிங், பிரசாந்த் கிஷோரை மாநில ஆலோசகராக நியமித்து, தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதே வேளையில் காங்கிரஸ் எம்எல்ஏவான சித்துவும் பிரசாந்த் கிஷோரை தனியாக பலமுறை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு நிலவி வரும் பூசலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் ஒரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்,. “காங்கிரஸ் தலைமை விருப்பப்பட்டால் சித்துவை அமைச்சரவையில் இடம் வழங்க தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் துணை முதல்வர் பதவி வழங்கவும் முதல்வர் அமரீந்தர் சிங் சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் சித்து ஆதரவாளர்களோ, அடுத்த தேர்தலில் சித்துவை முதல்வராக்க வேண்டும என்ற எண்ணத்தில் காய்களை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவினர், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து, அவர்களை குறைகளை கேட்டறிந்து, அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த சூழலில்தான், சித்து திடீரென டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பேசினார். காலையில் பிரியங்காவை சந்தித்த சித்து, மாலையில் ராகுல் காந்தியையும் சந்தித்துள்ளார். இருவரையும் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை அவர் தனித்தனியே வெளியிட்டுள்ளார். பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு 4 மணி நேரம் நடைபெற்றதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநில முதல்வர் விரைவில் கட்சி மேலிடத்தை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. , இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என்கிறார்கள் அக்கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் உட்கட்சி பூசல் நிலவி வருவதை காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
முதல்வருக்கும் சித்துவுக்கும் இடையே நடைபெற்று வரும் ஆடுபுலி ஆட்டம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள உட்கட்சி பூசலை தனக்கு சாதகமாக மாற்ற ஆம்ஆத்மி கட்சியும் காய் நகர்த்தி வருகிறது.
2017ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியில் சித்து சேர்ந்தார். தற்போதைய முதல்வர் அமரீந்தரும், . சித்துவும் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.