சென்னை:
தமிழ்நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? நந்தினி, ஹாசினி கொலைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் விரைவில் திமுக ஆட்சிமுக ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் முதல்வர் பதவிக்கான அதிகாரப் போட்டி நடைபெறும் நிலையில், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கவனிக்கப்படுவதில்லை. சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இளம்பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் அவர்களின் உயிர் பறிக்கப்படும் கொடூர சூழலும் நிலவுகிறது. அரியலூரில் சிறுமி நந்தினி பாலியல் கொடுமைக்குள்ளாகி, அவர் வயிற்றிலிருந்த கரு கிழித்து எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாமல் கடந்த வாரம் அந்த சிறுமியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
அதுமட்டுமின்றி, சிறுமி நந்தினி கொலையில் குண்டர் சட்டத்தின் கீழ் இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டவர்கள் கைதாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொய்வின்றி விசாரணை நடத்தி, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் சிவசங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நீதியை நிலைநாட்ட தி.மு.கழகம் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அருகே இன்னொரு சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடூரம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கும் பெண்களுக்கான பாதுகாப்பும் முற்றிலுமாக சிதைந்து விட்டது என்பதையே காட்டுவதாக உள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் சிறுமி ஹாசினியைக் கடத்திச் சென்று, அவர் வயதைக்கூடப் பொருட்படுத்தாமல் இதயமில்லாத இழிபிறவியினர் மிருகத்தனமாக நடந்து கொண்டதுடன், அந்த குழந்தையை எரித்துக் கொன்றுள்ளார்கள். உயிர் போலக் கருதி வளர்த்த தங்கள் குழந்தையின் கருகிய உடலைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து பெற்றோர் இன்னும் மீளவில்லை.
பிள்ளையை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரை நான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த போதும் அவர்களின் மனதில் உள்ள வேதனையும் அதன் வலியும் குறையவில்லை. நிற்காமல் வழிந்தோடும் கண்ணீருக்கிடையே என்னிடம் அவர்கள், “எங்க புள்ளைக்கு நேர்ந்த கதி இனி மேல் எந்த புள்ளைக்கும் வரக்கூடாதுங்க” என்று கதறித் துடித்தனர்.
அங்கிருந்த அவர்களின் உறவினர்களும் அக்கம்பக்கத்தாரும், “யாருமே இதைக் கண்டுக்கலீங்க. நீங்கதான் நடவடிக்கை எடுக்க வைக்கணும்” என வேதனைக் குரலுடன் வேண்டுகோள் வைத்தனர். எத்தனை கோடி முறை ஆறுதல் சொன்னாலும் அந்த பச்சிளங்குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரை தேற்ற முடியாது என்பதை உணருகிறேன். காட்டுமிராண்டித்தனமான குற்றத்தில் ஈடுபட்டு சிறுமி ஹாசினியை சிதைத்து எரித்துக் கொன்ற குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் வெகு விரைவில் கடுமையான தண்டனை பெற்றுத்தந்தாக வேண்டும்.
அரசும் காவல்துறையும் தங்களின் கடமையை சரிவர செய்தால் தான் நந்தினிக்கும், ஹாசினிக்கும் கொடூரம் புரிந்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். இனி இத்தகைய குற்றங்கள் நடைபெறாதபடி தடுக்க முடியும்.
ஆனால், இதையெல்லாம் கவனிக்க தமிழ்நாட்டில் அரசாங்கம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் யார் முதல்-அமைச்சராவது என்ற போட்டியில் அரசு நிர்வாகம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது.
ஹாசினி என்கிற பிஞ்சின் கொடூரக் கொலை பற்றி முதல்-அமைச்சரும் கண்டு கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனரும் எட்டிப் பார்க்கவில்லை என்பதை பார்க்கும் போது இவர்கள் எல்லாம் யாருக்காக பதவியில் இருக்கிறார்கள் என்ற கேள்வி தான் எழுகிறது.
புதிதாக முதல்வர் பொறுப்பேற்க துடிக்கும் ஆளுங்கட்சியின் தலைமையும் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தையும் அவரது குடும்பத்தின் அவல நிலையையும் காண்பதற்கு நேரமின்றி சட்டமன்ற உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக்கி பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
அரசும் காவல்துறையும் முடங்கிக் கிடக்கும் நிலையில், இத்தகைய கொடூரங்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குகின்ற ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆட்சியமைக்கப் போவது யார் என ஊடக சகோதரர்கள் பகலிரவு பாராது கடமையாற்றுவதை மதிக்கிறேன். அதே நேரத்தில், சிறுமி ஹாசினிக்கு நேர்ந்த கொடூரத்தைப் பற்றி மக்கள் மன்றத்தில் விளக்கி-விவாதித்து- உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டிய கடமையும் ஊடகத்தினருக்கு இருக்கிறது. அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கிடையிலான பரபரப்புகளின் காரணமாக, சிறுமி ஹாசினிக்கு நேர்ந்த கொடூரம் வெளியே தெரியாமலேயே போய்விட்டது.
அரசாங்கத்தின் கவனத்தை திருப்புகிற வகையிலும், விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நீதி கிடைக்கும் வகையிலும், இனி இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழாத வகையில் பாதுகாப்பான சட்டங்களை நிறைவேற்றத் துணை நிற்கும் வகையிலும் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
தமிழக அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு நீதியையும், இழப்பீட்டையும் வழங்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் குறிப்பாக சிறுமிகள் பாதுகாப்பில் காவல்துறை உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளே.. நம்மைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம் தான் தி.மு.கழகம். எளிய மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஆள்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்போம். நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.