சென்னை: போக்குவரத்துவிதிகளை மீறி, அபராதம் செலுத்தாத  பாஜக நபரின் காரில்பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் பயணம் செய்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் அப்பாவி வாகன ஓட்டிகளிடம் விதிகளை மீறியதாக கட்டாய அபராதத்தை வசூலிக்கும் தமிழ்நாடு காவல்துறை, இந்த காரின் உரிமையாளரிடம் மட்டும் ஏன் அபராதத்தை வசூலிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஒரு நாள் பயணமாக நேற்று கோவை வருகை தந்தார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய நிலையில், கார் குண்டு வெடிப்பு நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் சய்தார். மேலும், பல இடங்களுக்கு சென்று பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.  தொடர்ந்து,  கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து  பாஜக ஆதரவு  ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைச் சேர்ந்தவர்களுடன் மதிய உணவு அருந்தியதுடன்,   மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார்  இறுதியாக, நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு செல்லும் அவர், அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகியின் வீட்டில் தேநீர் அருந்தினார். அவருடன்  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், ஜேபி நட்டா பயணம் செய்து வரும் இன்னோவா கார், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நபர் செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் பல முறை போக்குவரத்து விதிகளை மீறி இருப்பதும், அதற்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த நெட்டிசன்கள், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  தமிழ்நாடு வருகை தந்த  நட்டா ஜியை வரவேற்கிறோம்!  ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் பயணிக்கும் காருக்கு சொந்தக்காரரான  திரு.செந்தில் , அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறுபவர் , அவருக்கு காவல்துறை அபராதம் விதித்து அனுப்பியுள்ள  3 சலான்கள் நிலுவையில் உள்ளன. நீங்கள் காரை அவரிடம் ஒப்படைக்கும் போது அந்தச் செலான்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பலர் இதை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தமிழக காவல்துறையினரின் நடவடிக்கையும் விமர்சித்து உள்ளனர்.

அப்பாவி வாகன ஓட்டிகளை மடக்கி, அதைக்கொடு, இதைக்கொடு,  போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார் என பல ஆயிரக்கணக்கில் அபராதம் மற்றும் வசூல் வேட்டை நடத்தும் போக்குவரத்து காவல்துறையினர், பாஜக நிர்வாகி செந்திலின் காருக்கு அபராதம் தொடர்பான செலான்களை மட்டும் அனுப்பிவிட்டு, அதை வசூலிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.