சென்னை: பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டும், இயக்குனர் மணிரத்தினத்தின் பிறந்தநாளை முன்னிட்டும் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! என்று கூறியுள்ளார்.
அதுபோல இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்னத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து ச் செய்தியில், தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.