மும்பை

மும்பை உயர்நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து நாடெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.  இந்த போராட்டங்களுக்கிடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடெங்கும் கடந்த சில நாட்களாக இந்த புதிய சட்டத்தை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்ததால் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக போராட்டங்களின் போது மாணவர்கள் தாக்கப்பட்டதாக வந்த செய்திகள் கடும் பரபரப்பை உண்டாக்கின.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுமார் 50 பேர் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.   மும்பை உயர்நீதிமன்ற ஆறாம் நம்பர் வாயில் முன்பு நின்று அவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை படித்தனர். அத்துடன் இந்த புதிய சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளனர்.