புதுடெல்லி: இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், மத்திய அரசின் திட்டமான ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் தாய்நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் வகையிலான ‘வந்தே பாரத்’ திட்டம், கடந்த மே மாதம் 7ம் தேதி துவக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ், மொத்தம் 4.5 இந்தியர்கள், கட்டாயத்தின் பேரில் தாய்நாடு திரும்புவதற்கு பதிவுசெய்தனர். இந்திய அரசின் வெளியேற்றுதல் விதிமுறையின்படி, வெளிநாடுகளில் சிக்கிய கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாணாக்கர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளில் வெளியேற்றப்படும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுகிறார்கள்.
தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வருதலின் முதற்கட்ட நடவடிக்கை மே 7 முதல் 15 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட நடவடிக்கை மே 17 முதல் 22 வரை நடைபெற்றது. ஆனால், அந்த இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜுன் 10 வரை அரசால் நீட்டிக்கப்பட்டது.
மூன்றாம் கட்ட நடவடிக்கை ஜுன் 11ம் தேதி தொடங்கப்பட்டது. அது ஜூலை 2 வரை நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்ட நடவடிக்கையில் மொத்தம் 550 விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 41 நாடுகள் உள்ளடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடங்கப்பட்ட மே 7ம் தேதி முதல், இதுவரை 2,50,087 இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.