சென்னை: பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மத்தியஅரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விமர்சித்தார். அப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நீக்கியதற்கு பதில், மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்கலாம் என காட்டமாக கூறினார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இன்று விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பபாட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”காங்கிரஸ் ஆட்சியில் 108 டாலருக்குக் கச்சா எண்ணெய் விற்றபோது, ரூ.70-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 50 டாலருக்கும் குறைவாக விற்கப்படுகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதன் விலை குறையும்.

பாஜக அரசு,  மக்களை மத, சாதிரீதியாக பிரிக்கின்றது. அறிவு குறைவானவர்கள் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகிறார்கள் என்று பாஜக சொல்கிறது. இது சமூக நீதிக்கு எதிரானது. அறிவியலின்படி மூளை அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் வேறுபட்டு உயர்கிறார்கள்  என்று விளக்கினார்.

பின்னர் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதுடன் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கே.எஸ்.அழகிரி , ”செயற்கையான விலை ஏற்றத்தைப் பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனால் அடிப்படைப் பொருட்களுக்கு விலையேற்றம் ஏற்படும். கலால் வரியை அதிக அளவுக்கு உயர்த்தியதால் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. பொருளாதாரம் தெரியாததால் இந்தத் தவறைச் செய்துள்ளனர் என்றார்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நீக்கியதற்குப் பதில், பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.