மோடி

ஜெய்ப்பூர்:

பிரதமர் நரேந்திரமோடி, போன ஜென்மத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அகுஜா ஆவார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

அப்போது, அவர், “பிரதமர் மோடிக்கு பல்வேறு தனித்திறமைகள் உண்டு. அதனால்தான் அவர், மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிகிறார்.

அவரது  செயல்பாடுகள், நாட்டு மக்களுக்கு தற்போது கசப்புணர்வை தந்தாலும், எதிர்காலத்தில் சிறந்த பலன்களை அளிக்கும்.

கியான் தேவ் அகுஜா

வரும் 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மோடி நல்லாட்சியை தொடர்வார்.  தன்னுடைய சிறப்பான திட்டங்களால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிப்பார்” என்று அகுஜா கூறினார்.

மேலும், “பிரதமர் மோடிதான் போன ஜென்மத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்” என்று கூறி அதிரவைத்தார்.

இந்த அகுஜாதான் சமீபத்தில், “பசுக்களை இறைச்சிக்காக கடத்துபவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று பேசி சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.