டெல்லி: மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது என்று மோடி அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய முன்னாள் மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லோ சலோ என்ற பெயரில் நேற்றுமுதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரியானா வழியாக டெல்லி முயற்சித்து வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் அரியானா அரசு செயல்பட்டு வருகிறது.
சாலைகளில் பெரிய பெரிய கற்களையும், கண்டெய்னர்களையும் வைத்து தடுப்பு ஏற்படுத்தி இருப்பதுடன், தண்ணீரை பீய்ச்சி அடித்து, விரட்டி வருகிறது. இருந்தாலும் விவசாயிகள் அனைத்து தடைகளையும் கடந்து டெல்லிக்கு முன்னேறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீதான் தாக்குதலின் மூலம் மத்திய அரசு விவசாயிகளை தங்களது விரோதிகளாகக் கருது என்று குற்றம் சாட்டி உள்ளார். அரசியலமைப்பு தினத்தன்று விவசாயிகளின் மீது மத்திய அரசு தாக்குதலில் ஈடுபட்டு பெரும் அவமானத்தை தேடிக்கொண்டதாகவும், இது நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு கருப்பு நாளாக மாறியுள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் , கூட்டணியில் இருந்த விலகிய நிலையில், கட்சின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.