பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி வணக்கம் தெரியவித்தும், பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில் நேற்று பாஜக புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் விழா மேடையில் இருந்தனர்.
அப்போது, பிரதமர் மோடி மேடைக்கு வந்தார். அவருக்கு முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.
மேடையின் நடுவில் இருந்த மாணிக் சர்க்காரின் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு தனது நாற்காலியில் மோடி அமர்ந்தார்.
ஆனால், பிரதமர் மோடி நடந்து வரும்போது, மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்திய போது, அவரை பிரதமர் மோடி கண்டுகொள்ளவ இல்லை. பதில் வணக்கமும் செலுத்தவில்லை.
அத்வானியை பார்க்கக்கூட விரும்பாதவராக அவரைக் கடந்து சென்றார் மோடி. இதை சிறிதும் எதிர்க்காத அத்வானியின் முகம் சுருங்கியது. அவமானத்தின் சாயல் அவரது முகத்தில் படர்ந்தது.
இந்த காட்சி செய்தி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
பெரும்பாலான நெட்டிசன்கள் பிரதமர் மோடியின் அசட்டையான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் மரியாதை என்றும், பிரதமர் மோடி அத்வானியை பார்த்து பதில் வணக்கம் சொல்லியிருக்க வேண்டும், திமிராக செல்லக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
.இன்னும் ஒரு சிலர் அத்வானி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்யவந்தபோது, அவருக்கு மைக் பிடித்தவர்தானே இப்போது பிரதமர் மோடி என்று கடுமையாக விமர்சித்து அந்த படத்தையும் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.