டெல்லி: பிரதமர் மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட் 2024-25) தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக தனது அலுவலக அதிகாரிகளுடன் நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீத்தாராமன், அங்கு தனதுதுறை அதிகாரிகளடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள  பட்ஜெட், அவரின்  ஏழாவது பட்ஜெட். மேலும் மோடி 3.0 அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக நேற்று (ஜூலை 22ந்தேதி)  நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில்,   2023-24 நிதியாண்டில் 8.2 சதவீத உண்மையான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை அடைந்து, கணிசமான உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்களை சமாளித்து, இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் முக்கிய பணவீக்கம் குறைந்துள்ளது, இதன் விளைவாக சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கம் FY25க்கு 4.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்த எண்கள் வரவிருக்கும் பட்ஜெட் 2024 இல் இருந்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மேலும் அதிகரித்துள்ளன.

பட்ஜெட் விவரங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள  தூர்தர்ஷன், பார்லிமென்ட் சேனல்கள் மற்றும் இந்திய அரசின் யூடியூப் தளம் உட்பட பல்வேறு அரசு சேனல்களில் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்வை சன்சாத் தொலைக்காட்சியும் ஒளிபரப்பும். அதிகாரப்பூர்வ இணையதளம், www.indiabudget.gov.in , ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணைப்பை ஹோஸ்ட் செய்யும், இதில் பயனர்கள் பட்ஜெட் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அணுகலாம்.