சென்னை: தமிழ்நாடு, புதுவையில் 11ந்தேதி முதல் 15ந்தேதி வரை சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  நாளை (ஜூன் 12) 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று (ஜூன் 11) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(ஜூன் 12) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 13, 14, 15 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 -49 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு இன்றும், நாளையும், வடகேரளா- கர்நாடகா கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.