டாக்டர் அப்துல் கலாமின் 89வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என கொண்டாடப்படும் மறைந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். அவரது டிவிட் பதிவில், முன்னாள் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர். அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், கலாம் குறித்து வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், “புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்குவதற்காக, நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக கலாம் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அவர் தொடர்ந்து வரும் நம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பார். அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
உள்துறை மந்திரி அமித் ஷா தனது டடிவிட்டர் பதிவில், “தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரும், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டமைத்தவருமான டாக்டர் கலாம் எப்போதும் வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். அறிவியல் மற்றும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பு என்றும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பதிவில், “முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்குவதாகவும், தனது விசாலமான பார்வை மற்றும் மனிதநேயத்திற்காக பணியாற்றி உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்திய மக்கள் ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel