டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஹல்தாரை மத்தியஅரசு  நியமனம் செய்துள்ளது. நேற்று காவிரி மேலாணமை ஆணையத்தின் 14வது கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முழு நேர ஆணையத்தலைவர்  நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில், இரு மாநிலங்களுக்கு இடையே சமூகமான நிலை ஏற்படும் வகையில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ந்தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி  4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது.  இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என 2 ஆக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு, காவிரி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று (27ந்தேதி) காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்நீர்வள ஆணையத்தின் தலைவர் செளமித்ர குமார் ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இநத் நிலையில், மத்தியஅரசு,  காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தரை நியமித்து   உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழுநேரத் தலைவராக செளமித்ர குமார் ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.