சேலம்: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் jமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒகேனக்கல் உள்பட பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளார்.
டெல்டா மாவட்டங்களின் மிக முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான மேட்டூர் அணை கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்தானது, 40 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.
இதனையடுத்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அணையின் பாதுகாப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறார். மேலும் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் விவாதித்தார்.
இதையடுத்து, அமைச்சர் இன்று பிற்பகல் ஒகேனக்கல் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.