சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

 

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ராணுவத்துடன் துணை ராணுவப்படையை இணைப்பதன் மூலம் ராணுவத் தலைமை பொறுப்பு யாருக்கு என்பதில் இருதரப்புக்கும் எழுந்த பிரச்சனையை அடுத்து அதிபர் மாளிகையை துணை ராணுவப்படையினர் கைப்பறினர்.

தலைநகர் கார்டோம்-ல் மட்டும் 97 கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரை கைப்பற்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இருதரப்பிற்க்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது தரை மற்றும் வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் யாரும் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்துள்ளதுடன் தேவையான குடிநீர், உணவு ஆகியவற்றை கையிருப்பில் வைத்திருக்கவும் தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

சண்டை ஓய்ந்ததும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாகியும் அதற்கான வழியை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மேற்கொண்டதாக தெரியவில்லை.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வங்கிகளும் செயலிழந்துள்ளது இதனால் கையில் உள்ள உணவு பொருள் தீர்ந்த நிலையில் பணமும் இல்லாமல் வெளியில் செல்ல முடியாமல் வெளிநாட்டினர் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இதனையடுத்து, சூடானில் சண்டையிட்டு வரும் இருதரப்பினரிடையே இந்தியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்தியஸ்தம் செய்து அங்கு சிக்கி உயிருக்கு போராடி வரும் இந்தியர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை மற்றும் பிரதமருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய சூழலில் அங்குள்ளவர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை மேலும் கவலையளிப்பதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.