டெல்லி: பாஜக 400 இடங்களை வென்றால், பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர், மதுரா, வாரணாசியில் கோவில் கட்டப்படும் என்று அசாம் முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேசிய அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வார், பாகிஸ்தான ஆக்கிரமிப்பு காஷ்மீரை,  இந்தியாவுடன் சேர்க்க 400 ‘சீட்’களை வெல்ல வேண்டும் என்றும்,  கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போத  பா.ஜ., 300 இடங்களில் வெற்றிப் பெற்றபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

இம்முறை 400 இடங்களை கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோயில் கட்டப் படும்,.  இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்று உறுதி கூறினார்.

மேலும்,  காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பார்லிமென்டில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியவர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி,  உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியதுடன் அதை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  பாஜக அரசு, இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி,  எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க  விரும்புகிறது என்றும் கூறினார்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 10ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர், இந்தப் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக் கூறி சிலர் போஸ்டர்களை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அரசியலில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.