மருந்து
சிறுகதை
பா.தேவிமயில் குமார்
“டேய், நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காதடா, உன் கல்யாணக் கவலையிலேயே அப்பாப் போய் சேர்ந்துட்டார், எனக்கும் அப்பப்ப, உடம்புக்கு முடியல, அதனால வந்த இந்த ரெண்டு மாச லீவுலக் கல்யாணத்தை முடிச்சுட்டு, வர மருமகளையும் உன்னோடையேக் கூட்டிட்டு வெளி நாட்டுக்குப் போயிடுப்பா,” எனக் கை கூப்பி அகிலனின் தாய் கண்கலங்கினாள்.
“ஏம்மா, எனக்கும் காமாட்சிக்கும் இடையில எத்தனைப் பிரச்சினை இருந்தாலும் இரண்டு வருஷம் சேர்ந்து சந்தோஷமா தான வாழ்ந்தோம், ஆனா நீயும் அப்பாவும், பேசியபடி இன்னும் பதினைந்து பவுன் வரவில்லையென அவளை நான் ஊரில் இல்லாத போது அப்படி வார்த்தையால அர்ச்சனைப் பண்ணியருக்கிங்க, பாவம் அவள் என்னிடமும், உங்களிடமும், பிறந்த வீட்டுடனும் ரொம்பப் போராட்டமாவே வாழ்ந்தா, நானும் அவளைப் புரிந்துகொள்ளாமல் விவாகரத்து வரை சென்று அவளை அனுப்பி விட்டேன், இந்த ஐந்து வருட இடைவெளியில் பாவம் அவள், என்ன செய்கிறாள் எனத் தெரியவில்லை, என் குழந்தையைக் கண்ணால் கூட பார்க்க எனக்கு அனுமதி தரவில்லை அவள், அவள் வேதனை அவளுக்கு, என் வேதனை எனக்கு” எனறான்.
“இவ்வளவு நடந்த அன்று கூட எனக்குப் பெரிதாக மனசு வருந்தமில்லை ஆனால் நாட்கள் போகப்போக நான் செய்த தவறை நினைத்து நாளும் வேதனைப்படறேன் அம்மா, இதற்கெல்லாம் நீங்களும் ஒருக் காரணம், இந்த லட்சணத்தில் எனக்கு இன்னொரு கல்யாணமா?”
“ஆமாம் அகிலா, என்னிடமும் தவறு உள்ளதுதான், அதற்கு பிராயசித்தமாக நீ இப்போது காமாட்சியைப் போலவே ஏழைப் பெண்ணாகப்பார், வரதட்சிணை எதுவும் வேண்டாம், நாமே பவுன் போட்டு கல்யணம் செய்து கொள்வோம், சரியாப்பா? போய் திருமண மையத்தில் பதிவு செய்து விட்டு வாப்பா,” என்றாள் அகிலனின் தாய் கல்யாணி.
“சரி பார்க்கிறேன்,” எனக் கூறிவிட்டு திருமண மையத்திற்கு சென்றான்.
“என்னசார் இரண்டாம் தாரமா?”
“ஆமாம் சார்,”
“சரி, அப்ப அந்த செக்க்ஷனுக்குப் போங்க” என இன்னொரு அறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சில பேர் அமர்ந்திருந்தனர், அவன் முறை வந்ததும்
“சார் உங்களுக்கு வரும் பெண் ஏற்கனவே திருமணமாகி இருந்தால் பரவாயில்லையா?” என்றாள்.
“ஆம், ஏற்கனவே திருமணமாகி கணவனால் கைவிடப்பட்டோ, விதவையாகவோ, அல்லது குழந்தையுடன் இருந்தாலும் சம்மதமே”
தன் குழந்தை எப்படி வளர்கிறதோ? அதற்குப் பிரதி உபகாரமாக எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தான்.
“சார், இதோ விவாகரத்தானவர்கள்” என ஒரு ஜம்பது பெண்களை கணிணித் திரையில் காட்டினார் அந்தப் பணியாளர்.
பின் குழந்தையுடன் இருக்கும் பெண்கள் ஒரு முப்பது பேரைக் காட்டினார், அதில் காமாட்சியின் போட்டோவும் இருந்தது அதைப் பார்த்தவுடன்
“இந்த நெம்பரும், முகவரியும் கொடுங்க நான் பார்க்கிறேன்” என வாங்கிக் கொண்டான்.
முகவரியில் விருத்தாசலம் என இருந்தது, ஓ! காமாட்சிக்கு விவாகரத்து ஆனபிறகு கடலூரிலிருந்து சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு சென்று விட்டார்கள் என எண்ணினான்.
சரி, சென்றுப் பார்ப்போம், நாம் செய்த தவறுக்கு நாம் தான் மண்டியிட வேண்டும், என நினைத்துக் கொண்டு, காரை எடுத்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து விருத்தாசலத்திற்கு சென்றான்.
செல்லும் வழியில் கொளஞ்சியப்பரிடம் பிராது கட்டி வேண்டிய படியே சென்றான் அகிலன் நடப்பது நடக்கட்டும், அவன் விட்ட வழி என சென்றான்.
சாயங்கால நேரமென்பதால் காமாட்சி வீட்டு வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்து அழகாகக் கோலமிட்டிருந்தாள், கீழே காமாட்சியின் தாய் அரசி மட்டும் இருந்தார்கள், சென்றவுடன் அந்த அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், முதலில் அடையாளம் தெரியவில்லையென்றாலும் பின் பார்த்து விட்டு கண்ணீர் விட்டார்கள்.
“மாமா இல்லையா அத்தை?”
“இல்லப்பா, உங்க விவாகரத்து முடிஞ்ச இரண்டு மாசத்திலே மன உளைச்சலில் போய் சேர்ந்திட்டார், பின் சொந்த ஊரான விருத்தாசலம் வந்துட்டோம், காமாட்சியின் அக்கா, அதான் என் பெரிய பொண்ணும் இந்த ஊர்ல இருக்கிறதால இங்கேயே வந்துட்டம்பா? நீங்க, அம்மா, அப்பா எப்படி இருக்கிங்க?”
“அப்பா, இல்லை, அம்மாவும் உடல் நலமில்லாமல் இருக்காங்க நான் சவுதியில் வேலை செய்கிறேன், காமாட்சியை விட்டுப் பிரிந்த உடன் சென்றேன், இப்போதுதான் திரும்ப வருகிறேன், திருமணப் பதிவு மையத்தில் காமாட்சியின் போட்டோ, அட்ரஸப் பார்த்துதான்.வந்தேன், அவளுக்கும் பதிவு பண்ணியிருக்கிங்களா? அத்தை,”
“ஆமாம்பா, நீ ஒரு வழி சென்று விட்டாய், அவளுக்கு வேறு வழி நான் தேட வேண்டாமா? எனக்குப் பிறகு அவளுக்கு ஆதரவு யார்? என்னுடையப் பிடிவாதத்தில் தான் பதிவு செய்திருக்கிறோம்” என சோகம் கலந்த அழுகையுடன் காமாட்சியின் தாயார் அரசி கூறினார்.
“காமாட்சியும், குழந்தையும் எங்கம்மா?” என்றான்.
“காமாட்சி மாடியில் டியூசன் எடுக்கிறா? எங்க வயித்துப் பாட்டை பார்க்க வேண்டாமா? குழந்தைக்கு ஏதாவது சேர்த்து வைக்க வேண்டுமே, இல்லன்னா பவுன் போடலன்னு என் பொண்ண நீங்க துரத்தின மாதிரி அவளையும் எதிர் காலத்தில யாரும் துரத்திடக்கூடடாதில்ல?” என “நறுக்” கெனப் பேசினார் காமாட்சியின் அம்மா.
அவனுக்குக் கோபம் வரவில்லை, மாறாக ஆச்சரியம் அடைந்தான், மருமகன் என்ற அந்தஸ்த்தில் இருக்கும் போது இவன் காலில் கூட விழத்தயங்காதவர்கள் இப்போதுத் தேளைப்போலக் கொட்டி விட்டார்கள் என நினைத்தான்.
“இங்க உட்காருங்க,” என மேஜையருகே நாற்காலியைப் போட்டு காபி போட்டுக் கொடுத்தார்கள், பின் “தப்பா எடுத்துக்காதப்பா, பெண்ணைப் பெற்ற எனக்கு வலிக்கும் வலி, உனக்குத் தெரியாதுப்பா, அதுதான், கொஞ்சம் கோபப்பட்டுட்டேன், கொஞ்ச நேரம் இருங்க, டியூஷன் முடிஞ்சி எட்டு மணிக்கு காமாட்சியும், பாப்பாவும் வந்துடுவாங்க, பார்த்துட்டுப் போறதுனாலும் போங்க, இல்லக் கிளம்புறதுனாலும் கிளம்புங்க, உங்க இஷ்டம்” என்று கறாராக சொல்லி விட்டார், காமாட்சியின் தாய் அரசி அம்மாள்.
தன் தாய் தனக்காகப்படும் வலியை இவர்களும் படுகிறார்கள் என நினைக்கும்போது வருத்த மடைந்தான், சரி எப்படியும் திரும்ப சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என அத்தை சொல்லி விட்டார்கள், ஆனால் ஒரே ஒருதரம் குழந்தையின் முகத்தைப் பார்த்தவிட்டுப் போகலாம் என நினைத்து அமர்ந்திருந்தான்.
“பாட்டி, பாட்டி, எனக்கு கேரட் தோசை ஊத்திக் கொடுங்க, நான் படிச்சி முடிட்சிட்டேன், அம்மா வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும்னு உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க அங்கிள் யாரு பாட்டி” என்றாள்.
“தெரிந்தவர்,” எனக்கூறிவிட்டு அடுப்படிக்கு சென்று விட்டார்கள்.
“இங்க வாம்மா உன் பெயரென்ன?”
“பொற்கலை,” என்றாள்.
ஆ, இது நம் குலதெய்வப் பெயராச்சே அதைத்தான் வைத்துள்ளாள் காமாட்சி என நினைத்தான்.
“சரி, என்னப் படிக்கிறிங்க.”
இப்ப “செகண்ட் ஸ்டேண்டர்டு” என்றாள்
“நோட்டில் என்ன எழுதுறிங்க?”
“பேமிலி ட்ரீ” வரையறேன் அங்கிள்.
வாங்கிப்பார்த்தான், தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மற்றும் குழந்தை என பொம்மை போட்டு இருந்த இடத்தில் அவள் எழுதியிருந்தாள்.
“உங்கப்பாப் பேரு என்ன?” என்றான்
“அகிலன்” என்றாள்
“எங்கே அவர்?”
“அவருக்கு என்னைப் பார்க்க ரொம்ப ஆசையாம், ஆனால் இன்னும் பஸ் கிடைக்கலையாம்” என மழலை மொழி மாறாமல் கூறினாள்.
“என் ப்ரெண்ட்ஸோட அப்பா எல்லாம் அவங்களுக்கு பொம்மை, சாக்லேட், எல்லாம் வாங்கித் தருவாங்க, ஆனா அப்பாவுக்கு பஸ் கிடைக்கலன்றுதனால அம்மாதான் எனக்கு எல்லாம் வாங்கித்தருவாங்க,” என்றுக் கன்னத்தில் கை வைத்து கவலையுடன் கூறினாள் பொற்கலை.
பார்த்தால் மட்டும் போதும் என நினைத்தவனின் கண்களில் கண்ணீர்க் கொட்டியது தன்னையும் அறியாமல் பொற்கலையை எடுத்து மடியில் அமர்த்தி கன்னத்தில் ஒரு நூறு முத்தமிட்டு இருப்பான் கண்ணீருடன் அணைத்துக் கொண்டான், இதனை அங்கு வந்த காமாட்சியும், காமாட்சியின் தாயாரும் பார்த்துவிட்டு செய்வதறியாதுத் திகைத்தனர்.
சரி இதற்கு மேல் காமாட்சி வாழ ஒப்புக் கொள்ளமாட்டாள், ஏனெனில் அத்தையே இவ்வளவுக் கோபமாக இருக்கும் போது, அவள் இன்னும் அதிக கோபமாகதான் இருப்பாள், காமாட்சி வருவதற்குள், சென்று விட வேண்டும், அவளை பார்க்கும் தைரியம் தனக்கு இல்லையென நினைத்தான், ஆனால் பொற்கலையின் மழலைப் பேச்சு அவனை நிறுத்தி விட்டது.
காமாட்சியைப் பார்த்தவுடன், கண்களாலே நலமா? என விசாரித்தான், அவனை மீண்டும் பார்க்கவேக் கூடாது என நினைத்தது மனது, இப்போது அவனுக்காக இரக்கப்பட்டது, இருந்தாலும் பட்ட அவமானங்களும், வலிகளும் அதைவிட அதிகமானக் கோபத்தைத் தந்தது. இரக்கத்தை இறக்கி வைத்தாள்.
“எழுந்திரிங்க, வெளியே போங்க” என மெதுவாக அதே சமயம் கம்பீரமாகக் கட்டளையிட்டாள்.
எழுந்த அவன் வெளியே செல்வதற்கு பதிலாக காமாட்சியின் தாயார் காலில் விழுந்து விட்டான்.
“அம்மா, என்னை மன்னித்து விடுங்கள், என் மகளைப் பார்க்கும்போது தான் உங்க வேதனை எனக்குப் புரிந்தது, என்அம்மாவும் தான் செய்த தவறை இப்போது நினைத்து வேதனைப்படுகிறார்கள், நானும் என் குடும்பமும் செய்த தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் இந்த 5 வருட தனிமை எனக்கு நல்லப் பாடத்தை கொடுத்தது எனக்கோ, காமாட்சிக்கோ வேறு திருமணம் வேண்டாம், எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள், பொற்கலையை நான் நல்ல விதமாக வளர்க்கிறேன், காமாட்சியை கைகளில் வைத்துத் தாங்குகிறேன்” எனக் கூறி வணங்கி எழுந்தான்.
“வேண்டாம் அம்மா! திருமணம் எனும் வலையில் நான் மீண்டும் அவரிடம் மாட்ட மாட்டேன் அவரைப் போகச் சொல்லுங்கள்” எனக் காமாட்சிக் கத்தினாள்.
“சரிங்க, நீங்கப் போங்க நான் காமாட்சியை சமாதனப் படுத்தி இரண்டு நாள் கழித்து போன் பண்றேன் அவள் என்ன சொல்றாளோ அதை ஏத்துப்போம்” என காமாட்சியின் தாயார் கூறினார்.
அவன் கிளம்பிய சமயம், இதை யெல்லாம் பார்த்த பொற்கலை அவர் தான் அப்பா எனப் புரிந்து கொண்டு “அப்பா” எனக் கண்ணீருடன் கால்களைப் பிடித்துக் கொண்டாள்.
இதைப்பார்த்தவுடன் இதுவரைக் கோபமாக இருந்த காமாட்சி, காமாட்சியின் தாயார் இருவரும் திகைத்தனர், குழந்தையின் பாசத்திற்கு முன் கோபங்கள் மண்டியிட்டது.
காமாட்சியின் தாயார், “சரிங்க மாப்பிள்ளை, ‘மன்னிப்பு கேட்பவர் பெரிய மனிதர், மன்னிப்பவர் அதைவிடப் பெரிய மனிதர்’னு சொல்லு வாங்க காமாட்சி பட்ட வேதனைகள் மிக அதிகம், நீங்கள் உங்கள் அம்மாவைக் கூட்டி வாருங்கள், பேசலாம், காமாட்சியின் வலியைப் போக்குங்கள், அவள் மனம் சரியான பிறகு சேர்ந்து வாழுங்கள்,” எனக் கூறினார்.
அப்போது அகிலன், “அம்மா இங்கப் பாருங்க, உங்கள் பேத்தி பொற்கலைப் பேசுகிறாள் என தன் அம்மாவிடம் குழந்தையைப் பேச வைத்தான் அகிலன்.”
இதைப் பார்த்தக் காமாட்சி, இனி சேர்ந்து வாழவேக் கூடாது, அகிலனின் முகத்தில் படவேக் கூடாது என நினைத்தோம், ஆனால் குழந்தைக்காக சில படிகள் இறங்கிதான் வரவேண்டுமென நினைத்தாள்.
ஓ, இப்படித்தான் குழந்தைகளுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு ஓவ்வொரு வீட்டிலும் பெண்கள் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள், என்ன செய்வது இந்த கோபங்களை அடக்கிடத்தான் கடவுள் தாய் என்னும் பதவியைக் கொடுத்துவிட்டான் என கடவுளை நொந்து கொண்டாள் காமாட்சி.
அத்தை நான் வெளிநாட்டிற்கு இனி செல்லப்போவதில்லை, காமாட்சியின் கோபம் தீரும் வரை நான் காத்திருக்கிறேன், அதுவரை பொற்கலையை நானும், அம்மாவும் வந்துப்பார்த்து செல்ல அனுமதி வேண்டும் என்றான் காமாட்சி மெதுவாக “சரி” என்றுத் தலையாட்டினாள்.
ஆனால் இதை எதுவும் அறியாத பொற்கலை, தன் தந்தையை விடாமல் அவனுடன் பேசியும், ஓடியும், சிரித்தும் அந்த இரவினை மேலும் அழகாக மாற்றிக் கொண்டிருந்தாள்.
காலம் ஒரு சிறந்த மருந்து என்பதை எங்கோ படித்தது போல ஒரு நினைவு வந்தது அகிலனுக்கு. இன்னும் சில காலம் ஆகும் காமாட்சியின் காயங்கள் ஆறிட என நினைத்தான்.
குறள் :
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?
(குறள் 05 : 06)
பொருள் :
குடும்ப வாழ்க்கையை நெறி தவறாமல் நடத்திச் செல்வது தான் ஒருவனுக்கு இணையற்ற சிறப்பைத் தரும், வேறு வழிகளில் அவன் வீணாக முயற்சி செய்தல் வேண்டா. இல்லறத்தை ஒழுங்காக நடத்தினாலே போதும் மற்ற அறங்கள் செய்ய வேண்டா.