சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, தரக்குறைவான வார்த்தைகளை பேசியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக மிகவும் மலிவான விளம்பரம் தேடும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி தனது பேச்சால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநில மக்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைக்கும் வகையில் கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இதுபோன்ற வெறுக்கத்தக்க, தரக்குறைவான வார்த்தைகளை கூறியதில்லை” என்று எழுதியுள்ளார்.

“மோடி மிகவும் கொடூரமான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார், அவை முற்றிலும் பிரிவினையை ஏற்படுத்தும். பொதுவெளியில் பிரதமர் பதவிக்கான கண்ணியத்தையும் ஈர்ப்பையும் குறைத்த முதல் பிரதமர் மோடி” என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்திலிருந்து மற்ற சமூகத்தை வேறுபடுத்தியதில்லை. அது பாஜகவின் வேலை” என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை கிடைக்கும் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.