எர்ணாகுளம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அய்யப்பனுக்கு தங்க அங்கி சாத்தி விசேஷ பூஜை செய்யப்பட்டது.

கார்த்திகை மாத சீசனையொட்டி, பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில், மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் கோவிலில் வழிபாடு நடைபெற்று வருகிறது. தினசரி பல ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 22ஆம் தேதி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் அய்யப்பனுக்கு பொருத்தும் தங்க அங்கி மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டது. இது இன்று மாலை கோவிலுக்கு வந்தடைகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த அங்கியை பதினெட்டாம்படி க்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதை அய்யப்பனுக்கு சாத்தி சிறப்பு அலங்காரம்  மற்றும் சிறப்புதீபாராதனை நடைபெறுகிறது.

இதையடுத்து பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும். தொடர்ந்து நாளை அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படடு, பூஜைகள் நடைபெறும்.  காலை 11 மணிக்கு அபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது.  இதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை  4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு மேல் நடை சாத்தப்படும்.

மகரவிளக்கு பூஜையை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.  அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்திப்பெற்ற  மகரஜோதி தரிசனம் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.