கர்நாடக மாநிலம் மைசூர் வனப்பகுதியில் பொன்னம்மாபேட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மக்கள் நடமாடும் பகுதியில் புலி சுற்றித்திரிந்துள்ளது.

பொதுமக்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அதனை பிடிக்க முயற்சி செய்யவில்லை.

இரு உயிர்களை, அந்த புலி பறித்த பின்னரே களத்தில் இறங்கி புலியை பிடித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 14 வயது சிறுவனையும், நேற்று காலை 60 வயது பெண்ணையும் புலி கொன்றுள்ளது. கொடகு வனத்துறையினர், அதன் பிறகே புலி ‘வேட்டையில்’ இறங்கினர்.

இருவரும் உயிர் இழந்த இடத்தில் இருந்து, புலியின் தடத்தை ஆராய்ந்து சென்றுள்ளனர். மஞ்சள்ளி என்ற கிராமத்தில் மறைந்திருந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

9 வயதான அந்த பெண் புலி, வேறு ஒரு புலியுடன் சண்டை போட்டதால் காலில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் மைசூர் அருகே உள்ள வன விலங்குகள் காப்பகத்துக்கு அதனை கொண்டு சென்றனர்.

– பா. பாரதி