கொல்கத்தா

நீட் 2018 தேர்வில் பல குழறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் ஜாவேத்கருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று சிபிஎஸ்ஈ மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பில் சேர நீட் தேர்வை நடத்தியது.   அது குறித்து நாடெங்கும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.  தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு சம்மந்தமே இல்லாத வட மாநிலங்களில் தேர்வு மையம் அளிக்கப்பட்டிருந்தது.    மேலும் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களில் இருவர் தேர்வு சமயத்தில் தந்தையை இழந்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த நீட் தேர்வைப் பற்றி குறைகள் கூறி உள்ளார்.  அவர் இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.  அதில், “தாய் மொழியான வங்க மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாட்கள் வழங்கவில்லை.    பல மாணவர்களுக்கு போட்டோஸ்டாட் நகல் வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட நகல்களில் உள்ள பல கேள்விகள் சரியாக தெரியவில்லை.   அத்துடன் நகல்கள் என்பதால் ஒவ்வொரு கேள்வித்தாளிலும் ஒரே பதிவு எண்கள் இருந்துள்ளன.   இதனால் பல மாணவர்களை இந்தி அல்லது ஆங்கில வினாத்தாட்களில் விடை அளிக்குமாறு சொல்லப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 600 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் 520 வினாத்தாட்கள் மட்டுமே  அளிக்கப்பட்டுள்ளன.  இதே நிலை ஹூக்ளி மாவட்டத்திலும் இருந்துள்ளது.   இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்வுகளை சிபிஎஸ்ஈ உடன் இணைந்து நடத்த மாநிலங்களுக்கு  அதிகாரம் வழங்க ஆவன செய்ய வேண்டும்.   அத்துடன் இது போல குழறுபடிகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும்” என மம்தா கூறி உள்ளார்.