திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், அங்கு  பக்தர்கள் கூட்டம்    அலைமோதி வருகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவாக ஐயப்பன் காட்சி அளிக்க உள்ளார்; மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் தை 1ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். இது மிகவும்  பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டுக்கான மகரவிளக்கு பூஜை புதன்கிழமை (ஜன.14) நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு மலையில் ஏற்றப்படும் மகர ஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தா்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனா். ஆதலால் அசம்பாவிதம் நேரிடாமல் தவிா்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருவாங்கூா் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சபரிமலை கோயில் பகுதியில் மட்டும் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா். மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்த ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30,000 பக்தா்கள், நேரில் முன்பதிவு செய்த 5,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல காலை 10 மணி வரையே அனுமதியளிக்கப்படும். அதன்பிறகு அனுமதி தரப்படாது. அதேபோல், பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்வதற்கு காலை 11 மணி வரை மட்டுமே அனுமதி தரப்படும்.

ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் பாரம்பரிய வழியில் மாலை 5.30 மணிக்கு வந்தடையும். பின்னா் சன்னிதானத்திற்கு மாலை 6.20 மணிக்கு திருவாபரணங்கள் கொண்டு வரப்படும். அந்த ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியை தொட வேண்டாம் என பக்தா்கள் அறிவுறுத்தப்படுகின்றனா். மலையில் ஏற்றப்படும் மகர ஜோதியை அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே பக்தா்கள் பாா்வையிட வேண்டும். வனப்பகுதியில் சமையல் செய்வது, பிற பாதுகாப்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிா்க்கும்படி பக்தா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலையில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

வனத்துறை சாா்பில் பம்பை ஆற்றின்மீது தற்காலிக நடை மேம்பாலங்கள், தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பம்பை, சன்னிதானம் போன்ற முக்கிய இடங்களில் தீயணைப்புத் துறை வீரா்கள் 31 வாகனங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனா். மகரவிளக்கு பூஜையன்று பாதுகாப்பாகவும், நெரிசல் இன்றியும் பக்தா்கள் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில், காவல்துறை மற்றும் பிற அரசு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனா்.

[youtube-feed feed=1]