டப்லின்
கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் நடந்த பொதுவாக்களிப்பில் கருச்சிதைவுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
கத்தோலிக்க கிறித்துவ மதப்பிரிவின் கொள்கைப்படி கருச்சிதைவு அனுமதிக்கப்படாத ஒன்றாகும். அது மட்டும் இன்றி எந்த ஒரு கருத்தடை முறையும் கடவுளுக்கு எதிரானது என அந்த மத கோட்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. அயர்லாந்து கத்தோலிக்க கிறித்துவர்கள் அதிகம் நிறைந்த நாடாகும். அந்த நாட்டின் அரசியலில் கத்தோலிக்க தேவாலயங்களின் பங்கு பெருமளவில் உண்டு என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அயர்லாந்து அரசு கருச்சிதைவை சட்டபூர்வமாக்குவது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 66.4% மக்கள் கருச்சிதைவுக்கு ஆதரவாகவும் 33.6% மக்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இது அயர்லாந்து நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் 8 ஆம் திருத்தத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். இந்த திருத்தத்தின் படி கருச்சிதைவு சட்ட விரோதமாக அயர்லாந்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி இனி கருச்சிதைவை சட்ட பூர்வமாக்க வேண்டிய நிலையில் அயர்லாந்து அரசு உள்ளது.