இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில், ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about 288,000 euros, $340,000)
காந்தி என்ற உடனே நினைவுக்கு வருவது அவரது மூக்கு கண்ணாடியும், கையில் வைத்திருக்கும் கம்பும்தான். இந்த நிலையில், அவரது தங்கமுலாம் பூசப்பட்ட மூக்கு கண்ணாடி, இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.
காந்தியின் மூக்கு கண்ணாடி, £260,000 (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம்) அளவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
தன்னால் பயன்படுத்த முடியாத பொருட்களை, அவை தேவைப்படுவோருக்கு அல்லது தமக்கு உதவியவர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.
1920 அல்லது 1930களில் தென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த போது, அங்குள்ள பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த தம் உறவினருக்கு அந்தக் கண்ணாடியை மகாத்மா காந்தி வழங்கியதாக, மூக்கு கண்ணாடியை ஏலம் நிறுவனத்துக்கு வழங்கிய முதியவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காந்தி தென் ஆப்பிரிக்காவில் வசித்தபோதுதான் முதன் முறையாக மூக்கு கண்ணாடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார் என்றும், காந்தியின் கண்ணாடிகளை தங்களிடம் ஒப்படைத்த உரிமையாளர் அளிக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவை என்றும் கிழக்கு பிரிஸ்டோலில் ஏலம் விடும் நிறுவன உரிமையாளர் ஆண்ட்ரூ ஸ்டோவ் தெரிவித்து உள்ளார்.
அந்த மூக்கு கண்ணாடியை வாங்குவதற்காக, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் ஏலம் கேட்ட நிலையில், திர்பார்ப்புகளை மிஞ்சி, பலமடங்கு அதிக விலைக்கு ஏலம் போனதாகவும், அந்தக் கண்ணாடி சுமார் £15,000 விலைக்கு ஏலம் போகக்கூடும் என தான் நினைத்த நிலையில், £260,000 ஏலம் போனது, ஏலம் கேட்கப்பட்ட தொகையின் முடிவு உண்மையிலேயே தனித்துவமாக அமைந்திருக்கிறது என்று ஆண்ட்ரூ ஸ்டோவ் கூறியுள்ளார்.
இந்த மூக்கு கண்ணாடி, பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டோல் ஏலக் கடையில், கடந்த வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்ட பிறகு இந்தத் தகவலை அந்த ஏல நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டது.