மும்பை; மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி கட்சிகள் அமைத்துள்ள மகா விகாஸ் அகாடி ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிந்த ஓரிரு நாளில் யார் முதல்வர் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நவம்பர் 20ந்தேதி தேர்தல் நடை பெற்றது. நாளை (நவம்பர் 23ந்தேதி) வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மகாயுதி கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற மகா விகாஸ் அகாடியும் போராடி வருகிறது. நடைபெற்று முடிந்த தேர்தலில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அதிரடி அறிவிப்புகளுடன் களமிறங்கியது.
மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தலை எதிர்கொண்டது.
தேர்தல் அமைதியாக முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில கருத்து கணிப்புகள், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ள நிலையில், வேறு சில கருத்துக்கணிபுகள் மகாராண்டிரா மாநிலத்தில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, அங்க தொங்கு சட்டசபை அமையும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், “மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை பொய்யாக்கும் என கூறியதுடன், மகாராஷ்டிராவில், மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது. அதனால் இந்த கூட்டணிதான் வெற்றி பெறும் என்றவர், மெஜாரிட்டி பெற்ற ஓரில் நாள் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றார்.
மகாராஷடிரா, ஜார்க்கண்ட் முடிவுகள் பா.ஜ.க.-வுக்கு கள உண்மையை வழங்கும்” என்று கூறிய பைலட், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வுக்கு தூக்கமின்மையை கொடுப்பார்கள் என விமர்சித்தார்.