போபால்:

பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த பாஜக.வினர் மீது வழக்குப் பதிவு செய்யாததை எதிர்த்து பெண் டாக்டர் ராஜினாமா செய்துள்ளார்.

 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் விக்டோரியா மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சியாமா சரன் சுக்லாவின் உறவினர்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்த இவர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து உள்ளூர் பாஜக பிரமுகர்கள் டாக்டரை தகாத வார்த்தைகளால் திட்டினர். அதோடு பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இது குறித்து ஓம்தி போலீசில் டாக்டர் புகார் செய்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து தனது டாக்டர் பணியை ராஜினாமா செய்து பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை பாஜக ஜபல்பூர் தலைவர் தாகூர் மறுத்துள்ளார். அவர் குழுந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் அஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.