அகமதாபாத்
குஜராத் மாநில பாடப்புத்தகங்களில் இந்து மதத்தைஉயர்த்துவதற்காக பல தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
குஜராத் மாநில பள்ளி மாணவர்களுக்கு துணைப் பாட புத்தகங்களாக அரசின் சார்பில் எட்டு புத்தகங்கள் அளிக்கப்படுள்ளன. அரசின் பாடப்புத்தக ஆணையம் அளித்துள்ள இந்த புத்தகங்கள் வித்யா பாரதி என்னும் ஆர் எஸ் எஸ் கல்வி அமைப்பின் உறுப்பினரான தீனநாத் பாத்ரா என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களில் மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட இந்திய சரித்திரத்தின் உண்மைகளை கூறுவதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்களில், “அமெரிக்கா ஸ்டெம் செல் ஆய்வு குறித்த கண்டுபிடிப்புக்காக பெருமை கொள்கிறது. ஆனால் உண்மையில் டாக்டர் பாலகிருஷ்ண கண்பத் மதாபுர்கர் உடல் பாகங்களை மீண்டும் உருவாக்க காப்புரிமை பெற்றுள்ளார். அவருக்கு இந்த எண்ணம் மகாபாரதத்தில் இருந்து வந்துள்ளது.
மகாபாரதத்தில் குந்திக்கு குழந்தை பிறந்த போது காந்தாரிக்கு குழந்தை இலாமல் இருந்தது. அதன் பிறகு கருவுற்ற காந்தாரி கோபத்தினால் கருச்சிதைவு செய்துக் கொண்டாள். அவள் கருவில் இருந்து ஒரு பெரிய பிண்டம் வெளிப்பட்டது.
வியாச முனிவர் அந்த பிண்டத்தை ஒரு தொட்டியில் வைத்து சில மருந்துகள் மூலம் காப்பாற்றினார். அதன் பிறகு அந்த பிண்டத்தை நூறாக பிரித்து 100 நெய்க்குடங்களில் தனித்தனியாக வைத்தார். இரு வருடங்களுக்கு பிறகு அதில் இருந்து 100 கவுரவர்கள் உருவாகினர்.
இதன் மூலம் ஸ்டெம் செல் பற்றி அறிந்த டாக்டர் மதாபுர்கர் அதை தனது புதிய கண்டுபிடிப்புக்கு பயன் படுத்தினார். இது தனது சொந்த கண்டுபிடிப்பு அல்ல என்பதையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அறிந்துக் கொண்டார்.
இதைப் போலவே ஆட்டோமொபைல் தொழில் நுட்பம் வேத காலத்தில் இருந்தே உள்ளது. அப்போது அனஷ்வா ரதம் என மோட்டார் கார்கள் அழைக்கப்பட்டன. பொதுவாக ரதம் என்பது குதிரைகள் பூட்டப்பட்டதாகும். ஆனால் அனஷ்வா ரதம் குதிரைகள் இன்றி இயங்கக் கூடியதாகும். அதை போல் இயந்திர ரதம் என்பதும் நம்முடைய தற்போதைய மோட்டார் கார் ஆகும். ரிக் வேதத்தில் இது குறித்து கூறப்பட்டுள்ளது. ” என காணப்படுகிறது.
அத்துடன் மகாத்மா காந்தி 1948 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் மறைவின் போது இஸ்லாமிக் இஸ்லாம்பாத் என ஒரு நாடு உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத் கல்வி அமைச்சர் புபேந்திரசிங் சுதாசமா, “இந்த புத்தகங்கள் இந்திய புராணங்களை குறித்த குறிப்பு புத்தகங்கள் ஆகும். இவை பாட திட்டத்தில் உள்ள புத்தகங்கள் அல்ல. நமது புராணங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்துக் கொள்ள பல புகழ் பெற்ற நூலாசிரியர்களின் புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்கள் கட்டாயப் பாடம் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டிய அவசியம் கிடையாது. அத்துடன் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்தும், காந்தி சுடப்பட்ட செய்தி குறித்தும் அச்சடிப்பில் தவறு ஏற்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் திருத்தங்களை வெளியிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.