டெல்லி: மக்களவையில் நாளை எஸ்ஐஆர் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருவதுடன், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகின்றனர். அதைததொடர்ந்து, எஸ்ஐஆர் குறித்து நாளை (டிசம்பர் 9ந்தேதி) விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளித்தார். அதன்படி நாளை மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்கிறார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதனைத் தொடர்ந்து, டிச. 9 ஆம் தேதி மக்களவையில் எஸ்ஐஆர் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மக்களவையில் நாளை நடைபெறும் எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடக்கி வைக்கவுள்ளார். இந்த விவாதம் 10 மணிநேரம் நடைபெறும் என்றும், புதன்கிழமை காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில், காங்கிரஸ் சார்பில் கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முகமது ஜவைத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் செளத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் படவி மற்றும் ஜோதிமணி ஆகியோர்பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் போது, எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலி, வாக்குத் திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை ராகுல் காந்தி எழுப்புவார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.