பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் வெறிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தலைமறைவு எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு லுக் அவுட் நோட்டீஸைப் பிறப்பித்துள்ளது
கர்நாடக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான ஹாசன் தொகுதியின் ‘தலைமறைவான’ எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு ஹசன் தொகுதி எம்.பி.யான ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கடள் எழுந்தன. அதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டபோது ஏராளமான பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதினார்ல.
இதற்கிடையில், ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வரும் பெண்களும், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினர். மேலும், ரேவண்ணா மனைவி இல்லாத போதெல்லாம், தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்,” என்று பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரேவண்ணா திடீரென தலைமறைவானார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான ரேவண்ணா ஏப்ரல் 27 அன்று உடனடி கைது செய்யப்படுவதை உணர்ந்து நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேவண்ணா, தற்போது, ஜெர்மனியில் இருப்பதாக நம்பப்படுகிறது, இதையடுத்து, அவரை கைது செய்யும் வகையில், லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது எல்லை சோதனைச் சாவடிகள் உட்பட இந்தியாவின் எந்தவொரு குடியேற்ற இடத்திலும் வந்தவுடன் தடுப்புக்காவலை அவர் எதிர்கொள்வார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாடு சென்ற தகவல் கிடைத்ததை அடுத்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் குறித்து அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம்” என்று கூறியவர், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடியேற்ற பாயிண்ட்களுக்கும் வழங்கப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கை, எந்தவொரு விமான நிலையம், துறைமுகம் அல்லது எல்லை சோதனைச் சாவடியில் புகார் அளித்தவுடன் பிரஜ்வால் ரேவண்ணா தடுத்து காவலில் வைக்கப்படுவார் என்பதை உறுதி செய்கிறது.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கர்நாடக அரசு ஏப்ரல் 28 அன்று குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கீழ் ஒரு எஸ்ஐடியை அமைத்தது. பல பெண்களின் புகார்களைத் தொடர்ந்து, அதே நாளில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஐபிசியின் 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 பிரிவுகளின்படி ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோரால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.