லக்னோ: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைந்தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். இது அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதியாகும்.

ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், 2வது தொகுதியாக உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடுகிறார். அவர் இன்று எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைமைக்கு பிடித்தமான தொகுதிகளில், உ.பி. மாநிலத்தில் உள்ள ரேபரேலியும், அமேதியும் முக்கியமானது. இந்த தொகுதிகளில் பலமுறை போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கினர். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில்,  அமெதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் தோல்வி அடைந்த நிலையில், அவர் அங்கு மீண்டும் போட்டியிடுவது கேள்விக்குறியானது. இந்த நிலையில், உ.பி. மாநிலம் ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில், அமெதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிஷோரி லால் சர்மாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மே 3 ஆம் தேதி (இன்று)  5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும்.  இந்த நிலையில், ராகுல்காந்தி  இன்று (மே 3ம் தேதி)  மதியம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்படுகின்றது. மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அனில் சிங் தெரிவித்துள்ளார்.  இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. இந்த முறை ராகுல் காந்தி இங்கிருந்து சாதனை அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அனில் கூறினார்.

ராகுல் காந்தி எளிமையான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் வேட்புமனு  தாக்கல் செய்யும்போது, காந்தி குடும்பத்தினர் மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அவருடன் இருப்பார்கள். டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் குழு ஒன்று அமேதி சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சோனியாகாந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ள நிலையில், ராகுல்காந்தி, வயநாட்டிலும், ரேபரேலி தொகுதியிலும்  போட்டியிடுகிறார்  உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவை ஆகும். ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சோனியா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் அமேதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தார். இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.  அமேதி தொகுதியில் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

ராகுல்காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் அமெதி தொகுதியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.