டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும், 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில்  தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது.  வாக்குப்பதிவு வரும் 20ந்தேதி (திங்கள்கிழமை)  காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் என தெரிவித்துள்ளது. இதில் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிடும் அமேதி உள்பட பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. அதாவது, இதுவரை  379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.  ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலானது,  8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங் களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு இன்று கடைசிகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு கட்டங்களை காட்டிலும், ஐந்தாம் கட்டத்தில் பாஜக காங்கிரஸ் இடையே கருத்து மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.  இன்று மாலையுடன்  தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

 உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸின் கே.எல்.சர்மா போட்டியிடுகின்றனர்.  ராகுல் காந்தி ரேபரேலியில் களம் காண்கிறார். லக்னோவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் இருந்து லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுகின்றனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கல்யாணைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மும்பை வடக்கிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் மற்றும் மும்பை வடமத்தியத்தில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகின்றனர்.