பெங்களூரு

ன்று பெங்களூருவில் நடந்த மாநாட்டில் லிங்காயத்து மடாதிபதிகள் கலந்துக் கொண்டு கர்நாடக முதல்வராக எடியூரப்பாவே தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.  முதல்வராக எடியூரப்பா பதவி வகித்து வருகிறார்.  தற்போது அவரை நீக்க பாஜக தலைமை தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதற்குக் கர்நாடகாவில் ஒரு சில பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  இன்று பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மடாதிபதிகள் மாநாடு நடந்தது.

அப்போது முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்றைய பல மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளின் கூட்டத்திற்குப் பிறகு, இம்மாநாட்டின் கோரிக்கை குறித்துப் பேசிய பலேஹோசூர் மடத்தின் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி, எடியூரப்பா தலைமையிலேயே அனைத்து தீர்வுகளும் காணப்பட வேண்டும் என்றார்.

முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா  நீக்கப்பட்டால் கர்நாடகா மேலும் சிக்கல்களைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார். எனவே இன்று நடந்த இந்த மாநாடு எடியூரப்பாவுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கும், பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்புவதற்குமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அநேகமாக இன்று மாலை  முதல்வர் மாற்றம் தொடர்பாக பாஜக  தலைமையின் உத்தரவினைப் பெற்றவுடன், தனது அடுத்தகட்ட நகர்வு பற்றி அறிவிப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.  அவர், “மாலை முடிவு வந்தவுடன், நீங்கள் எனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிந்து கொள்வீர்கள், அதன்பின்னர் நான்  ஒரு பொருத்தமான முடிவை எடுப்பேன்” என்று கூறினார்.

மேலும் திங்கள்கிழமைதான் முதல்வர் அலுவலகத்தில் தனது கடைசி நாளாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாஜக எடியூரப்பாவை மாற்ற முயன்றால் அது ஒரு சகாப்தத்தின் முடிவாக இருக்கும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சமனூர் சிவசங்கரப்பா தெரிவித்துள்ளார். எடியூரப்பாவுக்கு வீரசைவ-லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.