புதுடெல்லி:
டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனரான அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக மோசடி செய்ததாக காவல்துறையினரால் விசாரிக்கப்படும் மூன்று தொலைக்காட்சி சேனல்களில் ரிபப்ளிக் தொலைக்காட்சியும் ஒன்று.
இதனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனரான அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று மனுதாக்கல் செய்தார், ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதால் நாங்கள் மீண்டும் இதைப் பற்றி விசாரிப்பது நீதிமன்றத்தை நம்பாமல் செய்தது போன்று ஆகிவிடும், மேலும் வழக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொண்டால் மட்டுமே நாங்கள் இதில் தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
குடியரசு தொலைக்காட்சி சார்பில் ஆஜராகி பேசிய மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே, போலீஸ் கமிஷனர்கள் ஊடகங்களுக்கு தவறான செய்தியை பரப்புவது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் தீர விசாரித்து ஒரு தீர்ப்பை கொடுத்தால் மட்டுமே இதை பற்றி பேச வேண்டும், அதை விடுத்து தவறான வதந்திகளை பரப்புவது எந்தவிதத்திலும் நியாயமில்லை, இது தொடர்ந்தால் யார் தொலைக்காட்சியை பற்றி தவறாக கூறுகிறார்களோ அவர்கள் பெயரில் புகார் அளிக்க வேண்டி இருக்கும் என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.