சென்னை

நேற்று நள்ளிரவு மறைந்த திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் வாழ்க்கைக் குறிப்பு இதோ

திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 19.12.1922 ஆம் வருடம் அன்பழகன் பிறந்தார்.  இவரது தாயார் பெயர் சுவர்ணாம்பாள் மற்றும் தந்தை பெயர் கல்யாண சுந்தரனார் ஆகும்.   இவருடைய இயற்பெயர் ராமையா என்பதாகும்.   அன்பழகனுக்கு வெற்றிச்செல்வி என்பவருக்கும் கடந்த 21.2.1945 ஆம் வருடம் பெரியார் தலைமையில் திருமணம் நடந்தது.  இவர்களுக்கு அன்புச் செல்வன் என்னும் மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

வெற்றிச் செல்வி மறைந்த பிறகு சாந்தகுமாரி என்பவரை அன்பழகன் மணந்தார்.   இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயகுமாரி என்னும் மகளும் உள்ளனர். சாந்தகுமாரி கடந்த 2012 ஆம் வருடம் காலமானார்.   கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குன்றியிருந்த அன்பழகன் நேற்று நள்ளிரவு அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

திமுக ஆரம்பித்ததில் இருந்து அன்பழகன் கட்சியில் உள்ளார்.  இவர் க்டந்த 1977 ஆம் ஆண்டு முதல் திமுக பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இவர் அனைத்து நிகழ்வுகளிலும் கருணாநிதியுடன் ஒன்றாகக் கலந்துக் கொள்வார். நிகழ்ச்சி இல்லாத நேரத்தில் அறிவாலயம் அல்லது கருணாநிதி இல்லத்தில் அவரை அன்பழகன் சந்திப்பது வழக்கமாகும்.

அன்பழகன் 1962 முதல் 67 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.  அதன் பிறகு 1967 முதல் 71 வரை மக்களவை உறுப்பினராக இருந்து 71 ஆம் வருடம் தமிழக அரசில் சமூக நலத்துறை அமைச்சரானார்.  அதன் பிறகு தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அன்பழகன் 1991 ஆம் வருடம் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மீண்டும் 1996 ஆம் வருடம் வெற்றி பெற்ற அன்பழகன் 2001 வரை கல்வி அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் பிறகு 2001 மற்றும் 2006 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தல்களில் வென்ற அன்பழகன் 2006 ஆம் வருடம் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று 2011 வரை பணியாற்றினார்.