சென்னை:
தேர்தல் பணியில் ஈடுபட்ட மற்றும் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை போ மே 23ம் தேதி காலை 6 மணி வரை அவகாசம் அளிக்க வேண்டும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்துவது வழக்கம். தமிழகத்தில் 18ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஏராளமான அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர்கள் வாக்களிக்க கால அவகாசம் நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையருக்கு திமுக கடிதம் எழுதி உள்ளது.
இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்ததில் கூறியுள்ளதாவது:
தபால் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் கமிஷனின் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான, தபால் வாக்கு பெட்டி வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள், சில ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் துறை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் முறையாகவும், விதிகளின்படியும் தங்களின் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்படவில்லை.அதே போல் தபால் ஓட்டு செலுத்துவதற்கு, வாக்குசீட்டுடன் படிவம் -3 இணைத்து வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் வாக்குகளை பதிவு செய்வதற்காக, வாக்குசாவடிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு வாக்குசீட்டுடன் படிவம்-3 இணைத்து வழங்கப்படவில்லை. அதனால் மே 23ம் தேதி காலை 6 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் தபால் ஓட்டுக்களை பெறுவதற்கான வாக்குபெட்டிகளை வைக்க வேண்டும். த பால் வாக்கு பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.