வாகன கடனை திருப்பிச் செலுத்தாத ஓலா கார் ஒன்றை துரத்திச் சென்ற முகவர்கள் அதிலிருந்த பயணிகளை நெடுஞ்சாலையில் நடுவழியில் இறக்கி விட்டு பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விகாஸ் கவுடா என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :
“பெங்களூரில் இருந்து மைசூருக்கு என் குடும்ப உறுப்பினர்களை ஓலா கார் புக் செய்து அனுப்பி வைத்தேன். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சமூக விரோதிகள் காரை வழிமறித்து நிறுத்தி டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அதோடு, காரில் இருந்த என் குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்டு நீங்கள் வேறு வண்டியை பார்த்துக் கொள்ளுங்கள் இந்த வண்டி போகாது என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்.
நடுவழியில் திடீரென இறக்கிவிடப்பட்டதும் செய்வதறியாது திகைத்த அவர்கள் என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள் இருப்பது வெகு தொலைவில் இல்லை என்பதால் நான் பதறியடித்துக் கொண்டு உடனே எனது காரில் அங்கு சென்றேன்.
நான் அங்கு செல்லும் போது அந்த காரும் டிரைவரும் அங்கு இல்லை, விசாரித்ததில் கடனை கட்டாததால் அந்த காரை வழிமறித்த முகவர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
Cherry on top is I receive this, even adding "Additional Distance Fare" 🤬 pic.twitter.com/AscNQ3WLwd
— Vks (@VikHasya) May 15, 2022
இதனை அடுத்து ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறியபோது அவர்கள் இதுபற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் “நீங்கள் வேறு வண்டி மாறிக்கொள்ளுங்கள்” என்று சாவகாசமாக கூறினர்.
நாங்கள் வெளியூர் செல்ல ஏற்பாடு செய்த வாகனம் பாதியில் நின்றதை கூட புரிந்துகொள்ளாமல் அவர்கள் பேசியதும் இதற்கான உரிய தீர்வை சொல்லாமல் இருந்தது மிகவும் வேதனையளித்தது. பின்னர் அவர்களை என்னுடன் திரும்ப அழைத்து வந்துவிட்டேன்.
ஓலா நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல் இத்தோடு நின்றதாக எண்ணிய எனக்கு மேலும் வேதனை அளிக்கும் விதமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்ட நிறுவன ஊழியர்கள் உங்கள் மொபைலுக்கு ஒரு ஓ.டி.பி. அனுப்பப்பட்டுள்ளது அதை கூறுங்கள் உங்களின் இந்த பயணத்தை முடிக்க வேண்டும் என்று கூறினர்.
நாட்டின் மூலை முடுக்கெங்கும் தினமும் லட்சக்கணக்கான முறை இயக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த மென்பொருளோ அல்லது ஆபத்து நேரங்களில் உதவும் வகையில் எந்த வித கருவியும் இல்லாததோ ஒரு புறம் கவலையளிக்க.
அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் புரிதல் அதை விட மிகவும் மோசமாக இருந்ததை அவர்களின் இந்த அழைப்பு எனக்கு உணர்த்தியதோடு மிகவும் மோசமாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் ‘ஓலா’ முதன்மையாக இருப்பதை எனக்கு உணர்த்தியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த பயணத்திற்கு ரூ. 4,273 ஆனதாக பில்லையும் அனுப்பி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இவருக்கு, இதுபோன்று ஓலா நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
தவிர, பறிமுதல் விவகாரத்தில் முகவர்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், இதுபோன்ற ‘கேப்’ வாகனங்களை பறிமுதல் செய்யும் போது கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வாகனத்தில் பயணிகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், வாகன கடன் வாங்கும் நபர்கள் முகவரி உள்ளிட்டவற்றை கொடுத்துள்ள போதும் இதுபோன்று நடுவழியில் பறிமுதல் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்ன என்றும், அப்படி செல்லும் வாகனங்கள் குறிப்பாக இந்த இடத்தில் தான் செல்கிறது என்பது எவ்வாறு அவர்களுக்கு துல்லியமாக தெரிகிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘கேப்’ ஆப்பரேட்டர்கள் உதவி இல்லாமல் இந்த வாகனம் எங்கு செல்கிறது என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால், இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நடவடிக்கையும் சந்தேகத்திற்கு உறுதியதாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பறிமுதல் செய்யப்படும் வாகனம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சிறப்பூதியம் பெரும் இந்த முகவர்கள் அதற்காக சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் காத்திருந்து வாகன பதிவெண்களை கண்காணிக்கும் வேலையும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இருந்தபோதும், கடனை செலுத்த தவறிய வாகனங்கள் குறித்த எந்த விவரமும் தெரியாமல் அதில் ஏறிச் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்படுவதோடு, அதற்கான கூடுதல் கட்டணத்தை தண்டமாக அழவேண்டி உள்ளதாகவே இவர்களின் செயல்பாடு உள்ளது.
பயணிகளுக்கு இதுபோன்ற சிரமத்தை ஏற்படுத்தும் நிறுவனம் அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கண்டிப்பான நடைமுறை வந்தால் மட்டுமே ஓலா பயணம் மீண்டும் சுகம் பெறும்.