டில்லி

மாருதி சுசுகி வாகன விற்பனை கடந்த ஜூலை மாதம் மிகவும் குறைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாகவே அனைத்து வாகன விற்பனைகளில் சரிவு உண்டாகி வருகிறது.   இதனால் பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை மிகவும் குறைத்துள்ளன.   பல நகரங்களில் வாகன  முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.  இவற்றில்  நாட்டின் மிகப்பெரிய வாகன  உற்பத்தி தொழிற்சாலையான மாருதி சுசுகியும் அடங்கும்.

சென்ற மாத வாகன விற்பனை மற்றும் ஏற்றுமதி கணக்கின்படி மாருதி சுசுகி வாகன விற்பனை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 33.5% குறைந்துள்ளது.   சென்ற மாதம் 1,09,264 வாகனங்கள் மட்டுமே உள்நாடு மற்றும் வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதில் உள்நாட்டில் 1,00,006 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.

சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 1,54,150 வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது.  இந்த வருடம் அந்த விற்பனையில் 35.1% குறைந்துள்ளது.  இதில் சிறிய வாகனங்களான அல்டோ மற்றும் வேகன் ஆர் போன்றவை 11,577 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  சென்ற வருட ஜூலை மாதம் இவ்வகை வாகனங்கள் 37,710 விற்பனை ஆகி உள்ளன.  இது 69% குறைவாகும்.

இதைப் போலவே ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை சென்ற வருட  ஜூலை மாதத்திய 10,219லிருந்து இவ்வருடம் ஜூலை மாதம் 9,258 ஆக குறைந்துள்ளது.  இது 9.4% சரிவாகும்.   இந்த விற்பனை குறைவின் தாக்கத்தினால் மாருதி சுசுகியின் பங்குகள் 1.35% விலை குறைந்து காணப்படுகிறது.