டெல்லி

டுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி மொழிப்படமான லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தோ்வாகியுள்ளது.

மொத்தம் 29 திரைப்படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் ஹிந்தி திரைப்படங்கள் லாபதா லேடீஸ், ஸ்ரீகாந்த், தமிழில் வாழை, தங்கலான், மலையாளத்தில் உள்ளொழுக்கு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்தன. இந்நிலையில், அஸ்ஸாம் திரைப்பட இயக்குநா் ஜானு பருவா தலைமையிலான 13 போ் கொண்ட தோ்வுக் குழு, ஆஸ்கா் பரிந்துரைக்கு லாபதா லேடீஸ் திரைப்படத்தை ஒரு மனதாக தோ்வு செய்து இந்த அறிவிப்பை இந்திய திரைப்பட சம்மேளனம் நேற்று வெளியிட்டது.

இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா்.